கமில் சுவலபில் (1927 - 2009)
கமில் சுவலபில் (1927 - 2009)
அறிமுகம்
கமில் வாச்லவ் சுவெலபில் (நவம்பர் 17, 1927 - ஜனவரி 17, 2009) செக் நாட்டில் பிறந்து தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநர்களில் ஒருவர். தமிழ், தமிழர் பற்றிப் பிறமொழியினருக்குச் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தவர்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.செக் நாட்டில் பிறந்து தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் கமில் வாஸ்லவ் சுவலபில். இந்தியவியல், ஆங்கில இலக்கியம், சமஸ்கிருதம், தத்துவம் என பல துறை வித்தகர். சமஸ்கிருதம், திராவிட மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
தமிழ் மற்றும் சமுதாயப் பணி
செக் தூதரகத்தில் பணிபுரிந்த தமிழரிடம் தமிழ் கற்றார். பிறகு வானொலி, புத்தகங்கள் உதவியுடன் தானாகவே தமிழ் படிக்கத் தொடங்கினார். தமிழ் மொழியை ஆய்வு செய்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். நற்றிணை, புறநானூறு நன்கு அறிந்தவர். சிலப்பதிகாரம் மற்றும் கல்கியின் நாவல்களை மொழிபெயர்த்துள்ளார்.
தெள்ளுத் தமிழில் உரைகள் நிகழ்த்துவார். தொல்காப்பியத்தை மொழிபெயர்க்கும் அளவுக்கு தமிழ்ப் புலமை கொண்டவர்.
கிரேக்கம், லத்தீன், ஜெர்மன், ஆங்கிலம், ரஷ்யன், சமஸ்கிருதம், தமிழ், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, இத்தாலியன், போலந்து என பல மொழிகள் அறிந்தவர். பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்துள்ளார்.
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானிடம் இவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. முருகப் பெருமானின் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தான் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்று நூலுக்கு ‘தி ஸ்மைல் ஆஃப் முருகன்’ என்று பெயரிட்டுள்ளார். சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் பற்றியும் எழுதியுள்ளார்.
படைப்புகள்
தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி நூல்களை செக், ஆங்கிலம், ஜெர்மனில் மொழிபெயர்த்துள்ளார். திராவிட மொழியியல், சங்க இலக்கியம், தமிழ் யாப்பு பற்றி ஆங்கிலத்திலும், தென்னிந்தியா பற்றி செக் மொழியிலும் புத்தகம் எழுதியுள்ளார்.
பாரதியார் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரைப் பற்றி சிறப்பாக ஆய்வு செய்து, ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி பாரதியின் புகழை உலகம் முழுவதும் பரப்பியவர். பாரதியார் கால இந்தியாவின் நிலை, தமிழகத்தின் நிலையை அரசியல், சமூகப் பின்னணியுடன் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
தமிழ், தமிழர் பற்றி வெளிநாட்டினருக்கு சிறப்பாக அறிமுகம் செய்துவைத்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழில் சமஸ்கிருதம் கலப்பு, இருளர் மொழி பற்றி ஆய்வு செய்துள்ளார்.
பேராசிரியர் பணியில் இருந்து 1992-ல் ஓய்வு பெற்றார். புத்தகம் எழுதுவது, அதை வெளியிடும் பணி, மொழி ஆராய்ச்சி என்று ஓயாமல் உழைத்தவர். ஏறக்குறைய 25 நூல்களை எழுதியுள்ளார். நூல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என 500-க்கும் மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார்.
விருதுகள் /சிறப்புகள்
அவரது பெயருக்கு செக் மொழியில் ‘எதையும் சிறப்பாக செய்பவன்’ என்று அர்த்தம். அதைக் குறிக்கும் விதமாக, செக் நாட்டில் பிறந்து தமிழுக்கு சிறந்த தொண்டாற்றிய அவருக்கு ‘நிரம்ப அழகியர்’ என்ற பெயரைச் சூட்டினார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியர் வ. சுப்பையா. கமில் சுவலபில் 82-வது வயதில் காலமானார்.